நோக்கு, போக்கு, செயல்
தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ்மொழி, இலக்கியங்களின் அடிப்படையில் கலை, அறிவியல், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் பல்துறை ஆய்வினை முறைப்படுத்தல்; வளர்த்தெடுத்தல்; ஓலைச்சுவடிகளையும் அரிய/பழமையான அச்சு நூல்களையும் பாதுகாத்தல்; பதிப்பித்தல்; தமிழ்மொழி, பண்பாடு தொடர்புடைய கல்வெட்டுகளையும் தொழில்சார் வழக்குச் சொற்களையும் இலக்கியச் சொல்லடைவுகளையும் தொகுத்து வெளியிடுதல்; மற்ற இந்தியப் பண்பாட்டோடு தமிழுக்குரிய தொடர்புகளை ஆய்வு செய்திட மையங்களை ஏற்படுத்துதல்; மற்ற நிறுவனங்களோடு கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளுதல்; இன்றைய அறிவியல் தேவைக்கேற்பத் தொன்மை மரபின் தொடர்ச்சியாகத் தமிழ்மொழியை வளர்த்தெடுத்தல் முதலியன தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தலையாய நோக்கங்கள்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வுப்பணிகளோடு கற்பித்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக நல்கைக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய மைய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிற நல்கை நிறுவனங்களின் உதவியுடன் கல்வியாளர்கள் பெருந்திட்டங்களையும் குறுந்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.