கேள்வி காட்சி மையம்
கேள்விக்காட்சி மையம், தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுகளில் குறிப்பாக மரபுசார்ந்த கலைகள், நாட்டுப்புறக்கலைகள், நாடகம், வரலாறு, தமிழ் இலக்கியம், மொழியியல், பண்பாடு, அறிவியல், ஓவியம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, மெய்யியல், புவியியல், மண்ணியல், வானியல், சித்த மருத்துவம், அரிய கையெழுத்து, ஓலைச்சுவடி, கல்வெட்டு மற்றும் தொல்லியல் அகழாய்வுகள் போன்ற துறை ஆய்வுப் பணிகளில் இணைந்து தரவுகளை ஒளி ஒலிப்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறது.
இம்மையம் இதுவரை 250க்கும் மேற்பட்ட நாடகங்களையும், மரபுச்சார்ந்த கலை நிகழ்ச்சிகளையும் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் 65 ஆவணப்படங்களை உருவாக்கி உள்ளது. ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் இம்மையம் பணியாற்றி வருகிறது.இம்மையத்தின் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களும் ஆய்வாளர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
இம்மையத்தின் வாயிலாக நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு தமிழ்ப்பல்கலைக்கழக சமுதாய வானொலி நிலையம் (வளர்தமிழ் வானொலி 912) மூலம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பல்கலைக்கழகத்தைச் சுற்றி 40 கல் சுற்றளவு வரை இந்த ஒலிபரப்பை கேட்கும் வண்ணம் அலைவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இச்சேவை மக்களைக் கவர்ந்து பாராட்டை பெற்றுள்ளது.
வயதுவந்தோர் கல்வித் திட்டத்திற்காக இம்மையம் தயாரித்த 5 குறும்படங்கள் தஞ்சை நகரை சுற்றி அமைந்துள்ள அனைத்து கிராமங்களிலும் திரையிடப்பட்டன. பொதுமக்களும், நாளிதழ்களும் குறிப்பாக இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றன இப்பணியினைப் பாராட்டி செய்தி வெளியிட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமின்றி பிற கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழங்களுக்கும் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து வருகிறது.
இம்மையமானது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துறைகள் மேற்கொள்ளும் ஆய்வுப்பணிகளை ஆவணப்படுத்துதல் மட்டுமல்லாது துறைகள் நடத்தும் மாநாடுகள், கருத்தரங்குகள், பணிப்பட்டறைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், களஆய்வு மற்றும் அகழாய்வு கண்டுபிடிப்புகள் மற்றும் பல்கலைக்கழக பொது நிகழ்வுகள் ஆகியவற்றைப் பதிவு செய்தல், ஒளி மற்றும் ஒலி அமைப்பின் அடிப்படையில் மீளுருவாக்கி உரியவர்களுக்கு வழங்குதல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் போன்ற பணிகளையும் செவ்வண்ணமே செய்து வருகிறது.