துணைவேந்தரின் செய்தி
தமிழ்ப்பல்கலைக்கழகம்தமிழகஅரசால்வழங்கப்பட்ட 900 ஏக்கர் (3.6 கி.மீ2) நிலப்பரப்பில் 43,868.34 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகளவு நிலப்பரப்பைக் கொண்டமைந்த பல்கலைக்கழகமாகத் தமிழ்ப்பல்கலைக்கழகம் விளங்குகின்றது. ”உள்ளுவதெல்லம் உயர்வுள்ளல்” என்பதே இதன் உயர்ந்த குறிக்கோள் ஆகும்.
”தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காகக் கல்வி (ம) ஆராய்ச்சித் துறைகளில் சிறந்து விளங்குதல்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், தமிழ்ச்சமூகத்தின் உயர்விற்காகத் தமிழ்மொழி, இலக்கியம் பண்பாடு, கலை, அறிவியல் ஆகியவற்றில் உயர்மட்ட ஆராய்ச்சியை மேம்படுத்துதல் என்ற உயரிய நோக்கத்துடன் 5 புலங்கள், 26 துறைகளுடன் சிறப்புடன் செயல்பட்டுவருகிறது.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகத்தமிழ் இருப்பதால், பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உறுதியாக உலகம் முழுவதும் பரப்ப வழிவகை செய்யும். இதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சிறந்த தூதுவர்களாக இருப்பார்கள்.
எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பான வளர்ச்சிக்கும் கல்வி,ஆராய்ச்சி, விரிவாக்கம் என்ற மூன்றும் முக்கியமான தூண்கள் என்பதை உறுதியாக நம்புகிறவன் என்ற அடிப்படையில் நமது பல்கலைக்கழகத்திற்குப் பெயரும் புகழும் சேர்ப்பதற்காக நாம் அனைவரும் மனத்தாலும் கரங்களாலும் தோள்களாலும் ஒன்றிணைந்து நம்பல்கலைக்கழகத்தின் உயர்வுக்காக ஒற்றுமையாக உழைக்க வேண்டுகின்றேன்..
உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் நம் பல்கலைக்கழகத்தின் பெயரும் விரைவில் இடம் பெற பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் தம் அறிவாற்றலையும், வளங்களையும் ஒருங்கே பயன்படுத்தி உழைத்திட அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் இந்த வெற்றியினை மிக குறுகியகால அளவிலேயே அடைய இயலும் என்று நம்புகிறேன்.
அன்பான வாழ்த்துக்களுடன்,
முனைவர் வி. திருவள்ளுவன்
துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்